பொருளறிவியல்

Thamizh • By கிருபா. சரவணன் • Posted on 04 Nov

பொருட்களின் அமைப்புக்கும் பொருட்களின் தன்மை அல்லது இயல்புகளுக்கும் உள்ள தொடர்பை ஆயும் இயல் பொருளறிவியல் (Material Science) ஆகும். மேலும், பொருட்களை எப்படிப்பட்ட செயல்பாட்டு முறைகளுக்கு உட்படுத்தி வேண்டிய செய்கை அல்லது விளைவுகளை பெறலாம் என்பதையும் இவ்வியல் ஆய்கின்றது. பொருளறிவியல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒரு துறை. மனித அல்லது சமூகங்களின் வளர்ச்சியை அவர்களின் பொருளறிவியல் நிலைகளை கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் வகுத்து விவரிப்பர். கற்காலம், உலோக காலம், இயந்திர காலம், குறைகடத்திகள் காலம், நுண்பொருளியல் காலம் என வரலாறை பிரிக்கலாம். ஆரம்பத்தில் சூழலில் தான் கண்ட பொருட்களான கல், மண், தடி, எலும்பு, தோல் போன்ற பொருட்களை மனிதன் உபயோகித்தான். பின்னர் பொருட்களை செயல்பாடுகளுக்கு(process) உட்படுத்தி அல்லது செப்பனிட்டு அவற்றின் இயல்புகளை மாற்ற முடியும் என்பதை உணர்ந்தான். உதாரணமாக மண்ணிலிருந்து மட்பாண்டம், செங்கல், கண்ணாடி ஆகியவற்றை பொருளறிவியலின் துணை கொண்டு ஆக்க முடிந்தது. வேதியியலின் வளர்ச்சியும் அதனோடு இணைந்த பொருளறிவியலின் வளர்ச்சியும் இன்று மனித வாழ்வை பல வழிகளில் மேம்படுத்தி நிற்கின்றன. இன்று பொருளறிவியலின் ஒரு முக்கிய முனையான நனோ தொழில்நுட்பம் புதிய பொருட்களை புதிய அணுகட்டமைப்புகளோடு உருவாக்க தகுந்தவாறு முன்னேறி வருகின்றது. இது ஒரு பொருளாதார, சமூக புரட்சிக்கே வழிகோலும் என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள்.
எழுதியவர்
எழுத்தாளர்

கிருபா. சரவணன்

கணினிப் பொறியாளரான கிருபா. சரவணன், இணையத்தில் நல்ல பல கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

You May Also Like